மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ அதிமுக அரசிற்கு ஆதரவாக மகளிர் சுய உதவிக் குழுவினரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தும் போக்கு உடனடியாக தடுக்கப்பட வேண்டும்.
மதுரை மாவட்டத்திலுள்ள மாவட்ட மகளிர் திட்ட அலுவலர், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பணிகளுக்கு தயார் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறார். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்குச்சாவடிகள் வாரியாக கைபேசி எண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை தயார் செய்து தர வேண்டும் என மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான பொறுப்பாளர் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. கட்சியின் தேர்தல் பணிகளுக்காக அரசு விதிமுறைகளை மீறி, அரசு நிர்வாகத்தை அதிமுக அரசு பயன்படுத்தியுள்ளது.
காந்தி கிராம பல்கலைக்கழகத்தை விட்டு விட்டு மற்ற மூன்று சமஸ்கிருத பல்கலைகழகங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளில், சமஸ்கிருத மொழியில் 15 நிமிடம் செய்தி சுற்றறிக்கை என வலுக்கட்டாயமாக திணிப்பது கண்டிக்கத்தக்கது.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் ஸ்மார்ட் சிட்டி மைய சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. செல்லூர் கண்மாய் தூர்வாரியதாக செல்லூர் ராஜு கூறியுள்ளார். இரண்டு நாட்கள் முன்பு ரசாயன கழிவு நுரை பொங்கியது, கண்மாய் முறையாக ஆழப் படுத்தியதாக தெரியவில்லை. இது குறித்து ஆய்வு செய்திட வேண்டும்” என்றார்.