சென்னை: சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 25) அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து பேச முற்பட்ட போது அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக ஒருமையில் பேசியதாக கூறி அதனைக் கண்டித்து அதிமுகவினர் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எழுந்து
பேச முற்பட்ட போது அமைச்சர் பெரியகருப்பன் மரியாதை குறைவாக உட்காருடா என ஒருமையில் பேசினார். அமைச்சர் பெரியகருப்பன் பேச்சை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.
சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப திமுக இரட்டை வேடம் போடுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. அதற்குட்பட்டு தான் ஆளுநரும் செயல்பட முடியும்" என்றார்.
தொடர்ந்து பேசிய கே.பி.முனுசாமி, அமைச்சர் அதிமுக உறுப்பினரை கடுமையாக விமர்சித்தார். அப்போது முதலமைச்சர் தலையிட்டு அவரைக் கட்டுப்படுத்தாமல் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து கூறினார். ஆகவே இதனை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்" என்றார்.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!