சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மாறி மாறி கடிதம் எழுதிக்கொள்கின்றனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, அதிமுகவின் உட்கட்சி விவகாரம் இப்போது அக்கட்சியைத் தாண்டி முதலில் நீதிமன்றம், அதன் பின் காவல் துறை; இப்போது, தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பாகப்போட்டியிடும் வேட்பாளருக்குக் கையெழுத்துப் போட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குக் கடிதம் அனுப்பினர்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி , 'அதிமுகவை செயல்படவிடாமல் தடுத்துவிட்டு இப்பொழுது கையெழுத்து கேட்கிறீர்களே. இது சரி இல்லை' என ஓபிஎஸ்க்கு பதில் கடிதம் அனுப்பினார். மேலும் பொதுக்குழுவை எப்படி எல்லாம் தடுக்க முடியுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளீர்கள் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பில் 23 தீர்மானங்களை ரத்து செய்யக்கோரிய மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு எண்ணாகப் பதிவு செய்துள்ளது. இதில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும் பட்சத்தில், இது எடப்பாடி தரப்பிற்குச் சாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று காலை எடப்பாடி, தனது ட்விட்டர் பக்கத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என இருந்த பொறுப்பை எடுத்துவிட்டு அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என மாற்றியுள்ளார். இதில் இருந்து ஒற்றைத்தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையைத் தொடர்ந்து இன்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலோசனையில் சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், பெரம்பலூர் மாவட்டச்செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'அன்புள்ள அண்ணன்' என்று ஆரம்பித்துவிட்டு ஓபிஎஸ்ஸை கடிதத்தில் வறுத்தெடுத்த ஈபிஎஸ்!