சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. அது குறித்து ஆலோசிக்க ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நேற்று (ஜூன்.14) அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் 75 மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என 150 பேர் பங்கேற்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் தலைமையில், அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் நான்கரை மணி நேரம் நடைபெற்றது.

அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் நிலையில் ஒற்றை தலைமை கோஷங்கள் எழுந்துள்ளன. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பொழுது ஒற்றை தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரசார விவாதம் நடத்தினர்.
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு கட்சியினர் ஒற்றை தலைமைதான் வேண்டும் எனவும் அது ஓ.பன்னீர்செல்வம் தான் இருக்க வேண்டுமென தொண்டர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "ஒற்றை தலைமை அவசியம் என பெரும்பாலான மாவட்ட செயலாளர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வலியுறுத்தியுள்ளனர்" என்றார்.
இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், காமராஜ் மற்றும் ஆர்.பி.உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். ஆலோசனை முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அண்ணனை (ஓ. பன்னீர்செல்வம்) பார்க்க வந்தோம். ஒற்றைத் தலைமை விஷயம் பற்றியோ, 23ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் பற்றியோ எந்த விஷயத்தையும் அவரிடம் பேசவில்லை.
நாங்க வேற விஷயமா அண்ணனை பார்க்க வந்தோம். இன்றைய கூட்டத்தில் பலரும் பல கருத்துகளைத் தெரிவித்தனர். சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றனர். சிலர் இரட்டைத் தலைமையே இருக்கட்டும் என்றனர். சிலர் இபிஎஸ் தலைமை வேண்டும் என்றனர். சிலர் ஓபிஎஸ் தலைமை வேண்டும் என்றனர்" என தெரிவித்தார்.
இதனிடையே, இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக பிற அணிகளின் மாவட்டச்செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு பொதுக்குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் - ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ...