சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், " உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். குடியுரிமை திருத்தச் சட்டம் மிகவும் ஆபத்தானது. நாட்டின் ஒற்றுமையை சிதைக்கக் கூடிய பாசிச சட்டமாக குடியுரிமை திருத்தச்சட்டம் இருக்கிறது. அதிமுக சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையில், பாஜக அதிமுகவை இயக்கி வருகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம் அதிமுகவும், பாமகவும் தேசத்திற்கு துரோகத்தை செய்திருக்கிறது. அதிமுக இந்த வரலாற்று கலங்கத்தை எவ்வாறு துடைக்கப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள், கட்சித் தலையீடு இல்லாமல், தன்னியல்பாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருப்பதன் மூலம் புதிய அரசியல் எழுச்சி ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது.
வீதியில் இறங்கிப் போராடும் மாணவர்களை அடக்கி, ஒடுக்குகிற முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடுகின்றன. மாணவர்களை அவ்வளது எளிதில் ஒடுக்கிவிட முடியாது. குடியுரிமை சட்டத்திருத்த விவகாரத்தில் எதிர்க் கட்சிகளின் தூண்டுதலால் போராட்டங்கள் நடப்பதாக சொல்வது சரியில்லை" என்றார்.
இதையும் படிங்க: டெல்லியில் ஓபிஎஸ்; நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பு!