சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி செய்த முறைகேடு தொடர்பாக, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த 13ஆம் தேதி கைது செய்யபட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அமைச்சர் பொறுப்பில் இருந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் அவரது துறைகளான மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகியவை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆளுநர் அந்த கோரிக்கையை முதலில் நிராகரித்தார். பின்னர் மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி லாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இதையும் படிங்க: அரசு கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்க உயர் கல்வித்துறை உத்தரவு!
இந்நிலையில் அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சித் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் இன்று இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுகவினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் “இலாகா மாற்றத்திற்குப் பிறகு செந்தில் பாலாஜியை அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை. செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சராக இருப்பதால் நீதிமன்றக் காவலில் இருக்கும்போது ரகசிய கோப்புகளை அணுக இயலும். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும்’’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடூரமான வழக்குகளில் சாட்சியங்களின் வீடியோ, ஆடியோ பதிவு - அஸ்ரா கார்க்கிற்கு உயர் நீதிமன்றம் பாராட்டு