சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து பிப்.20ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான யுத்தத்தை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதன் காரணமாகவே, அடுத்த கட்ட நகர்வு குறித்து தனது ஆதரவாளர்களுடன் பிப்.20ஆம் தேதி ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் 'இரட்டைஇலை சின்னம்' எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒதுக்கப்பட்டது என்பது ஓபிஎஸ் தரப்பினருக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. பொதுக்குழு மூலம் இடைத்தேர்தல் வேட்பாளரை ஈபிஎஸ் அணியினர் தேர்வு செய்தனர்.
இதே போன்று பொதுக்குழு மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியின் நியமனமும் செல்லும் என்று அவரது தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் தற்போது வரை ஓபிஎஸ் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பினரின் பேச்சாளர் பட்டியலை கூட தேர்தல் ஆணையம் நிராகரித்ததால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரத்திற்கு கூட செல்ல முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிப்.20ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பினர் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்.27ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் ஈபிஎஸ் தலைமையிலான அணி எவ்வளவு வாக்கு பெறும் என்பது குறித்தும், ஒருவேளை அதிக வாக்கு பெற்றால் நமது அணியில் திட்டம் குறித்தும், உச்சநீதிமன்றத்தில் உள்ள பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு குறித்தும் ஓபிஎஸ் அணியினர் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிப்.24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நமது அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆலோசனை கூட்டம் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.15) வெளியிட்ட அறிக்கையில், "அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் வருகின்ற 20ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பல நூறு கோடி ரூபாய் ஊழல்:திமுக அரசு ஆபத்து -அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!