சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் வெறும் பெயர் பலகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 31) தமிழ்நாடு சட்டப்பேரவையில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதா தாக்கல்செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர், மேலும் கலைவாணர் அரங்கம் அமைந்திருக்கக்கூடிய வாலாஜா சாலையின் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.