சென்னை
சென்னை திருவொற்றியூரில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சரான மாதவரம் மூர்த்தி, திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் குப்பன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் உதயநிதியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
உதகை
உதகையில் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பெண்கள், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருச்சி
உதயநிதியை கண்டித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முசிறி கைகாட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தினை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசுகையில், பொங்கல் பண்டிகைக்காக முதலமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கி வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுகவினர் முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர் என்றார்.
கடலூர்
கடலூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் குமரன் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கள்ளக்குறிச்சி
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழக செயலாளர் குமரகுரு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:மயிலாடுதுறையில் உதயநிதியின் உருவ பொம்மை எரிப்பு