சென்னை: சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, அதிமுக வில்லிவாக்கம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். இவரது வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் வந்து திருமண அழைப்பிதழ் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இதற்காக மூர்த்தி வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் மூர்த்தியின் தலை, கை பகுதிகளில் வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக மூர்த்தி சிறிது தூரம் ஓடியுள்ளார். இருந்தபோதிலும், அந்தக்கும்பல் தொடர்ந்து விரட்டி வந்து வெட்டியுள்ளது.
அந்தச் சமயத்தில் மூர்த்தி தன்னை தற்காத்துக்கொள்ள திடீரென அவர்கள் கொண்ட வந்த கத்தியைப் பிடுங்கி பிரபாகரன் என்பவரை தலையில் சரமாரியாக வெட்டினார். இதில், பிரபாகரன் தலையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனால், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் மூர்த்தி, தலையில் பலத்த காயமடைந்த பிரபாகரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அதிமுக பிரமுகர் மூர்த்தி மற்றும் அவரை வெட்ட வந்த பிரபாகரன் ஆகியோருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்துவருகின்றனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய விஜயசேகர், ராஜு,முத்து ஆகிய மூன்று பேரை தனிப்படை காவலர்கள் மூலம் சம்பவம் நடந்த இரண்டு மணிநேரத்தில் கைது செய்தனர். தற்போது, அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அயப்பாக்கம் பகுதி முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை அருகே திரைப்பட பாணியில் சர்வ சாதாரணமாக கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வேகமாக வந்த பேருந்தின் டயரில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு