சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று(மார்ச்.8) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அதிமுக சார்பில் பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, 75 கிலோ கேக்கை வெட்டி பெண்களுக்கு வழங்கினார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் திங்கள் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் மகளிர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆயிரம் பேருக்கு கல்வி கற்பிப்பதும், ஒரு பெண்ணுக்கு கல்வி கற்பிப்பதும் ஒன்றாகும்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு இருந்தது. ஆனால், தற்போதைய 22 மாத கால விடியா திமுக ஆட்சியில் வீதிகளில் பெண்கள் நடமாட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண் உரிமை, பெண்கள் சுதந்திரம் என்று வாய்கிழிய பேசும் ஆட்சியாளர்கள், பெண்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவது காலக் கொடுமையாகும்.
எழுத்தறிவுத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிர் விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், பணிக்குச் செல்லும் மகளிருக்கு 25,000 ரூபாய் மானியத்துடன் 2.85 லட்சம் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 4,000 ரூபாய் மதிப்புள்ள அம்மா தாய்சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3,26,065 பயனாளிகளுக்கு 2,595.30 கிலோ தங்கம், ரூபாய் 1,238,17 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடிப் படை, பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள், விலையில்லா கறவைப் பசு, வெள்ளாடுகள் வழங்கும் திட்டம், வீட்டில் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி வழங்கும் திட்டம், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான விடுதிகள், பெண்களை சுயசார்புடையவர்களாக உயர்த்தும் பொருட்டு சமூக நலத் துறையின் கீழ் 123 மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்கள் திட்டம்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அதிகாரமளிக்க 50 சதவீதம் இட ஒதுக்கீடு. அதே போல், எந்த ஓர் அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகப் பொறுப்புகளில் மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் கழகப் பணியாற்றி வருவதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்துகிறேன். இது போன்ற எண்ணற்ற முன்னோடித் திட்டங்கள், தமிழகப் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவே அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்டன.
அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய்த் திகழும் பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப்படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும் என்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: Women's Day Special: தமிழ் சினிமாவில் அதிகரிக்கும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள்!