முதலமைச்சர், துணை முதலமைச்சரை கொலை மிரட்டல் விடும் வகையில் பேசிய திமுகவை சேர்ந்த பெண், அதற்கு தூண்டுதலாக இருந்த மு.க. ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவினர் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் பிரிவின் மாநில இணை செயலாளர் திருமாறன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "கடந்த 20ஆம் தேதி தேனி மாவட்ட அரண்மனை புதூர் பகுதியில் அனுமதியின்றி திமுக நடத்திய கிராம சபை கூட்டத்தின்போது திமுகவைச் சேர்ந்த லட்சுமி என்பவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
ஏற்கனவே திமுகவினர் நடத்தக்கூடிய கிராம மக்கள் சபை கூட்டத்தை அரசு தடை செய்தபோதும், அனுமதியின்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகின்றார். இதேபோல் கோவையில் நடந்த கூட்டத்தின்போது, ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் தொண்டர்கள் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டம் என்ற பெயரில் கரோனா விதிமுறைகளை மீறி மு.க ஸ்டாலின் கூட்டம் நடத்தி வருகின்றார். கொலை மிரட்டல் விடும் வகையில் பேசிய லட்சுமி, அதற்கு தூண்டுதலாக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: 'ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது' - வைகைச்செல்வன்