சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் அண்ணா நகர் தொகுதிக்குள்பட்ட டி.பி. சத்திரம் பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த சுதாகர், சந்தோஷ்குமார், மோகன் ஆகிய மூவரும் பணம் பட்டுவாடா செய்ததாக திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அண்ணாநகர் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக இரவு நேரத்தில் மின்சாரத்தைத் துண்டித்து பணம் பட்டுவாடா செய்துவருவதாகவும் இது குறித்து காவல் துறையிடம் தகவல் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பணம் பட்டுவாடா செய்பவர்களைக் கண்டுபிடித்து காவல் துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுகவினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதற்கிடையில், அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர், தேர்தல் பறக்கும் படை கண்துடைப்பிற்கானதா? இது உங்கள் எல்லையில் நடைபெறவில்லை என்றால் இந்தச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினர்.