சென்னை: 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் நீதிமன்றம் தடை விதிக்காததால், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்ட சிறிது நேரத்திலேயே எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்று கொண்டார்.
பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டபோதும், தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே இருந்து வருகின்றன. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களை ஈபிஎஸ் தரப்பினர் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தனர். அதேநேரம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளதால், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நகர்வாக ஏப்ரல் 7ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. செயற்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தீர்மானமாக அங்கீகரிக்க திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. அதேபோல், வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, கர்நாடக சட்டப்பேரவை தேர்தல், அண்மைக்காலமாக அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஏற்பட்டு வரும் கருத்து மோதல்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஒரு சில காரணங்களால், ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவிருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான உரிமையியல் வழக்கில் வரும் 20ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறவுள்ளதால், அவசரகதியில் செயற்குழுவை கூட்ட வேண்டாம் என அதிமுக தலைமைக் கழகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு அறிவிக்கப்பட்ட முதல் செயற்குழு கூட்டத்தை நடத்தாமல் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு ஒருவிதமான பின்னடைவாக தான் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.