சென்னை: அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 27) கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் கூட்டம் தொடங்கியது. அதிமுகாவின் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரக்கூடிய பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாகவும், ஓபிஎஸ் தரப்பை எதிர்கொள்வது தொடர்பாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த கூட்டத்திற்கு முன்பு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் கிளை கழகங்கள் உள்ளன. அதில் அனைத்திலும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக கிளைச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது.
முன்னதாக ஓபிஎஸ் நடத்தியது மாவட்ட செயலாளர் கூட்டமே அல்ல. அவர் நியமனம் செய்த நிர்வாகிகள் அதிமுகவினரே அல்ல. எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் அரசியல் செய்தவர்கள் அனைவரும் ஈபிஎஸ் பக்கம் உள்ளனர். உண்மையான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: OPS: தேனி பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை