தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அதிமுக முழுவீச்சில் அதன் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, அதிமுகவின் முதல்கட்டத் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (டிச.27) தொடங்கியது.
முதலமைச்சரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிமுக மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலர்கள் எனக் கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். இதில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்கவில்லை.
அதிமுகவினர் சபதம்
முன்னதாக, அதிமுக நிறுவனரான எம்ஜிஆரின் நினைவுநாளான நேற்று முன் தினம் (டிச.25), வரும் தேர்தலிலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்க வைப்போம் என கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் இணைந்து உறுதிமொழி ஏற்றனர்.
அப்போது, "அதிமுக ஏழைகளைக் காக்கின்ற இரும்புக்கோட்டை. 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், மகத்தான வெற்றிபெற்று மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திக் காட்டுவோம், சரித்திரம் படைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்" என சபதம் ஏற்றனர்.
ஈபிஎஸ்- ஓபிஎஸ் தேர்தல் வியூகம்
அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்கள் வரும் ஜனவரி 9ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 8.50 மணிக்கு சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சசிகலா வருகை, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள், கூட்டணி தொடர்பான முடிவுகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 72ஆவது மன் கி பாத்: மோடி இன்று உரையாற்றுகிறார்