சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கூட்டணியை எவ்வாறு அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு அடிக்கல் போட தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாக அதிமுக - பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றது.
பாஜக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது, அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என வெளிப்படையாக தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குறிப்பிடாதது, வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்காதது வரையிலான சம்பவங்கள் தொடர்பாக, அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையே முரணான கருத்துக்கள் வெளிப்பட்டன.
இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரூ.67 ஆயிரத்து 338 கோடி செலவில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளார். குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான நீர்த்தேக்கத்தைத் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய் கண்டிகைப் பகுதியில் ரூ.380 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருகிறார்.
அமித் ஷாவிற்கு, இந்த வாய்ப்பை கொடுத்து அதிமுக அரசு மாநில பாஜக இடையே தொடரும் கருத்து வேறுபாடுகளுக்கு முற்று புள்ளி வைக்க நினைக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தல் என்பது அதிமுக-விற்கு சவாலான ஒன்றாக இருக்கும்.
தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால் மக்கள் எதிர்ப்பு அலை, மாபெரும் ஆளுமை ஜெயலலிதா மறைவு என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அதிமுக வரும் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி கடும் தோல்வியைச் சந்தித்தது.
தமிழ்நாடு மக்கள் பாஜக கட்சிக்கு எதிரான மன நிலையில் இருப்பதால், பாஜகவுடன் கூட்டணியில் அதிமுக இருப்பதால் வாக்குகள் பாதிக்கப்படுவதாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தநிலையில், கடந்த நாள்களாக பாஜகவிடமிருந்து அதிமுக விலகியிருப்பது போல் மக்களிடம் காட்ட பல்வேறு அதிரடி முடிவுகளை அதிமுக எடுத்தது.
குறிப்பாக, மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி தர தாமதம் செய்த போது, 7.5 இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை வெளியிட்டது, அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் சுரப்பா மீது விசாரணை ஆணையம் அமைத்தது என, தொடர் அதிரடியில் அதிமுக களம் இறங்கியது.
இதனிடையே தற்போது அமித் ஷா தமிழ்நாடு வருவது மாநில அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அமித் ஷா வருகை உறுதி செய்யப்பட்ட உடனே அதிமுக மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை அதிமுக தலைமை அறிவித்தது.
அதிமுக ஆலோசனை கூட்டம், அமித் ஷா வருகைக்கு ஒரு நாள் முன்னதாக இன்று (நவ.20) நடைபெறவுள்ளதால், கட்சி நிர்வாகிகள் இடையே பாஜக - அதிமுக கூட்டணி பற்றி விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுஒருபுறமிருக்க சிறையிலுள்ள சசிகலா வருகை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதுகுறித்தும் அதிமுக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதைப் பற்றி ஈடிவி பாரத்திடம் தொலைபேசி வாயிலாக அதிமுக செயற்குழு உறுப்பினர் சிவசங்கரி கூறுகையில், "கூட்டணி என்றால் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அமித் ஷா வருகை அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும், பாஜக கட்சி ரீதியான ஆலோசனை தான்.
இன்று நடைபெறவுள்ள அதிமுக ஆலோசனை கூட்டம் எப்போதும் நடக்கும் ஒன்று தான். ஆனால், தேர்தல் வருவதால் இது எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கூட்டத்தில் சசிகலா வருகை பற்றியெல்லாம் பேசுவதற்கு அவசியமே இல்லை" என்றார். அமித் ஷா வருகை தமிழகத்தில் மாற்றம் ஏற்படுத்துமா, கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது என, தமிழக பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.