சென்னை தாம்பரம் நகராட்சி சார்பில் கரோன தொற்று பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மேம்பாலம் சுற்றுச் சுவரில் கரோனா தொற்று குறித்த ஓவியங்கள், வாசகங்கள் வரையப்பட்டிருந்தன. அதில், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தற்போது அதிமுக சார்பில் பல இடங்களில் சுவரில் விளம்பரங்கள் வரையப்பட்டு வருகின்றன. தாம்பரம் மேம்பாலம் சுற்று சுவர்களில் கரோனா விழிப்புணர்வு குறித்து வரையப்பட்டிருந்த ஓவியங்களை சுண்ணாம்பு அடித்து அழித்துவிட்டு, அந்த இடத்தில் அதிமுக தேர்தல் பரப்புரை விளம்பரங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அந்த விளம்பரங்களில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகளின் பெயர்கள் எழுதப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சி என்பதால் நகராட்சி நிர்வாகிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில், இந்த விழிப்புணர்வு வாசகங்களை அழித்த தாம்பரம் அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கவுன்ட் டவுன் மணியோசை கேட்கவில்லையா? மு.க. ஸ்டாலின் கேள்வி