தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. முதற்கட்டமாக பாமக, பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தேமுதிகவோடு மட்டும் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால், இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிமுக தரப்பில் 15 சீட்டுகள் தர முன்வந்த நிலையில்,தேமுதிக 23 இடங்கள் தர வேண்டும் என வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், அதிமுக தரப்பில் கூடுதலாக இரண்டு இடங்கள் தரப்படும் என கூறப்பட்டது. அதாவது, 17 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு தேமுதிக சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ஒப்பந்தம் நாளை (மார்ச் 8) கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் தோழமைக் கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, புதிய நீதிக் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது கட்சிகளின் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்குவோர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் என்றும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அக்கட்சிகளுக்கான தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டிய நிலையில் அதிமுக தலைமை உள்ளது.
இதையும் படிங்க : 3 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்ட நடத்துநருக்கு அமைச்சர் பாராட்டு