சென்னை: வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் பட்ஜெட் உரையை வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டபேரவை வந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தோளில் பச்சைத் துண்டு அணிந்து விவசாயி போல காட்சியளித்தார்.
பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார், அதன்படி, தமிழகத்தில் தற்போது சாகுபடி பரப்பு அதிகரித்து 63 லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்றார். மேலும் 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கபட்டுள்ளன என்றும் சந்தனம் தேக்கு உள்ளிட்ட 77 லட்சம் மரக்கன்றுகள் 33 ஆயிரம் சதுர பரப்பளவில் நடப்பட்டுள்ளது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வரும் நிதி ஆண்டில் 127 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் 2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னை மரம் இல்லாத 300 வீடுகளுக்கு இரண்டு மரக்கன்றுகள் வீதம் 15 லட்சம் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், கேழ்வரகு, கம்பு ஆகிய சிறுதானியங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும். நாமக்கல், திருப்பூர், ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் புதிதாக சிறுதானிய மண்டலங்களில் இணைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும். ரசாயன பயன்பாட்டை குறைத்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 32 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவத்திற்கேற்ற பயிர், தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்காக 25 முதல் 50 விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம முன்னேற்ற குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, கிச்சிலி சம்பா, தங்க சம்பா, கீர சம்பா ஆகியவைகளை பாதுகாத்து பரவலாக்கிட கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் நெல் ஜெயராமன் மரபு சார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்படும். அதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவிலான பாரம்பரிய ரக நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக 10 விவசாயிகளுக்கு தலா 3 லட்ச ரூபாய் வழங்கும் வகையில் ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்று பயிர் சாகுபடிக்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும், 60,000 சிறு, குறு, நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடியில் வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகிக்கப்படும் என்றார்.
மேலும், ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை பெருக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கப்படும். சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். சிறுதானிய உற்பத்திய பெருக்கும் வகையில் ரூ.82 கோடியில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும் என்றும், தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் சாகுபடியினை உயர்த்த ரூ.11 கோடி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பீடுகளைத் தவிர்க்கும் வகையில் காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்களிப்பாக, 2,337 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மாவட்டங்களில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் பலா சாகுபடி செய்ய பலா இயக்கத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மிளகாய் சாகுபடியை 40,000 ஹெக்டேராக உயர்த்தி மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மிளகாய் மண்டலமாக மாற்றப்பட்டு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஆண்டு முழுவதும் வெங்காயம் கிடைப்பதற்கு ரூ.29 கோடியும், தக்காளி கிடைப்பதற்கு ரூ.19 கோடியும் ஒதுக்கப்படும் எனவுன். சௌ சௌ, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால பயிர்கள் 1000 ஏக்டேர் பரப்பளவில் பராமரிப்பதற்கு தேவையான பொருட்களை மானியத்தில் வழங்க ரூ.2 கோடியே 50 லட்சம் ஒதிக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் 53 ஆயிரத்து 400 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் தொழில் முனைவோராக பரினாம வளர்ச்சியடைய 200 இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வீதம் வழங்க ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட முறையில் காய்கறிகள், பூக்கள் சாகுபடி செய்ய பசுமைக் குடில், நிழல் குடில் போன்றவைகள் அமைப்பதற்கு மானியம் வழங்க 22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், இந்த திட்டத்தில் திண்டுக்கல், தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தேனி, ஈரோடு, திருப்பத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும் என அறிவித்தார்.
ஏற்காடு அரசு தவரவியல் பூங்கா, சென்னை மாதவரம் தோட்டக்கலை பூங்காக்களை பார்வையாளர்களை கவரும் வகையில் அழகுபடுத்த தலா 5 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். அயல்நாட்டு தொழில்நுட்பங்களை அறிந்து உற்பத்தியை பெருக்கும் வகையில் 150 முன்னோடி விவசாயிகளை தேர்தெடுத்து இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்ல மத்திய, மாநில அரசு நிதியில் இருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
மேலும், பண்ருட்டி அருகிலுள்ள பகுதிகளில் முந்திரி சாகுபடியை 550 ஹெக்டேர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த முந்திரி செடிகளை அகற்றி உயர் ரக விளைச்சல் செடிகளை 500 ஹெக்டேர் பரப்பளவில் நடவு செய்ய தனி கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் வாழை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் தேனி மாவட்டத்தில் வாழைக்கென தனி அடையாளம் உருவாக்கி உலக சந்தைக்கு எடுத்துச் செல்லும் விதத்தில் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு, தனியார் பங்களிப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
பனை மேம்பாட்டு இயக்கத்தில், 1 லட்சம் பனங்கன்றுகள் விநியோகிக்கப்படும். 124 இடங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடங்களுக்கு 510 உபகரணங்கள் வழங்கப்படும், மேலும் பனை மரம் ஏறுவதற்கு 1,000 உபகரணங்கள் வழங்கப்படும். மேலும் பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பனை பொருட்கள் வளர்ச்சி வாரியத்தின் பனை வெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்ட பிற பொருட்கள் தயாரிக்க பயிற்சி வழங்கப்படும். மேலும் மகளிருக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்கவும் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி திட்டங்களுக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.
குறுகிய கால பனை ரகங்களை உருவாக்குதல், நீரா, பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற மதிப்புகூட்டப்பட்ட பொருட்களின் தரத்தினை ஆராய, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரியில் பனைக்கென ரூ.15 கோடியில் ஆராச்சிக்கூடம் அமைக்கப்படும் என ஆறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:TN Agri Budget 2023: வேளாண் நிதிநிலை அறிக்கை முக்கிய தகவல்கள்!