சென்னை: இந்திய கடல்சார் மாநாடு மார்ச் 2 முதல் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வழிப்பாதை துறை அமைச்சகம் நடத்தும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். கரோனா தொற்று காரணமாக இந்த மாநாடு மெய்நிகர் மாநாடாக நடைபெறும்.
இதில், கப்பல் கட்டுதல், கப்பல் உடைத்தல், அகழ்தல் (dredging), துறைமுகங்களை நவீனமயமாக்கல், துறைமுகங்களில் பெர்த் மற்றும் முனையங்களின் வளர்ச்சி, இணைப்புத் திட்டங்கள், சுற்றுலா, கல்வி, திறன் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறும்.
இதில் 40 நாடுகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் நபர்கள் பங்கேற்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்கி இந்த மாநாட்டுக்குத் தொழில் துறை கூட்டாளியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் வாயிலாக 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என சென்னை துறைமுகத் தலைவர் ரவீந்திரன் கூறினார். இந்த மாநாட்டின் மூலம் தோராயமாக 2000 கோடி ரூபாய்க்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
குறிப்பாக ஶ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் பல்முனைய போக்குவரத்து முனையம் அமைப்பதற்காகத் தமிழ்நாடு அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியோருடன் இணைந்து துணை நிறுவனத்தை ஏற்படுத்தி, 1400 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் சென்னை- பெங்களூரு விரைவு நெடுஞ்சாலையை ஒட்டி அமையவுள்ளது. இது தவிர்த்து சென்னை ஐஐடி உடன் ஆராய்ச்சிக்காக ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை போடப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை துறைமுகத்திலிருந்து காரைக்காலுக்குப் பயணிகள் சேவையை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக புதுச்சேரி அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது என சென்னை துறைமுகத் தலைவர் ரவீந்திரன் கூறினார்.