சென்னை: அரசு மருத்துவர்களுக்கு நடத்தப்பட்ட பணியிட மாறுதல் கலந்தாய்வில் விதிமீறல்கள் நடைபெற்றதாக, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தெரிவித்திருந்தது. அதற்கு மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு விளக்கம் அளித்தார்.
அப்போது விதிகளின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது எனவும், எந்தவிதமான விதிமீறல்களும் நடைபெறவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு கடந்த அக்டோபர் 26ஆம் மனு அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் பெருமாள்பிள்ளை கூறியுள்ளதாவது, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு தரப்பட வேண்டி நீண்டகாலமாக போராடி வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் போராட்டம் நடத்திய போது, அடுத்து அமையும் திமுக ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.
ஆனால் தற்போது திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்கள் கடந்தும், இன்று வரை அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்த போது கரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.
அப்போது அரசுக்கு உறுதுணையாக இருந்ததோடு, தங்கள் உயிரையே பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்களின் எந்த ஒரு கோரிக்கையையும் இதுவரை அரசு நிறைவேற்றவில்லை.
மேலும் சட்டப்போராட்டக் குழு (LCC) அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சென்னை மற்றும் மதுரையில் தர்ணா போராட்டம், கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம், கலைஞரின் பிறந்த நாளையொட்டி மருத்துவர்கள் கூட்டாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் என பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
மேலும் மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் அரசாங்கத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை. இந்நிலையில் வரும் நவம்பர் 30ஆம் தேதி கலைஞரின் நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து விட்டு, அங்கு மவுனப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளோம். இதனால் அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என கருதி, தற்போது மருத்துவர்களை பழி வாங்கும் வகையில் அரசு செயல்படுகிறது.
சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை, செயலாளர் டாக்டர் தாஹிர் மற்றும் மகளிர் அணி செயலாளர் டாக்டர் லதா பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு 17b குற்ற குறிப்பாணையை அரசு வழங்கியுள்ளது. அதாவது கலந்தாய்வில் நடந்த பல்வேறு முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதைவிடுத்து பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நியாயம் கேட்ட பிரதிநிதிகளையே தண்டிப்பார்களா? அதுவும் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதா? இதுதான் தற்போது தமிழ்நாட்டில் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையா?
கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட போது, அரசை கண்டித்து முதலில் குரல் எழுப்பியது திமுக தலைவர் ஸ்டாலின் தான். ஆனால் இப்போது பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளை சுட்டி காட்டியதற்கே தண்டனை என்பதை, சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர வேறு எங்குமே பார்க்க முடியாது.
அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல. அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.
இதில், முதலமைச்சர் தலையிட்டு மூன்று மருத்துவர்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டுகிறோம். மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அரசாணை 354 உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அரசு மருத்துவர்கள் மன நிம்மதியுடன் பணி செய்யும் சூழலை இங்கு உருவாக்க வேண்டும்.
ஏற்கனவே அறிவித்தபடி வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி, கலைஞரின் நினைவிடத்தில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்து விட்டு, மவுனப் போராட்டம் மேற்கொள்வோம் எனவும் அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நீட் தேர்வில் தேர்ச்சிப்பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா