மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 14, 15ஆம் தேதிகளில் உலக அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றதில் 10க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன. இதில், இந்தியா சார்பாக உலக பாரம்பரிய சிலம்பம் சங்கத்தின் தரப்பில் தமிழ்நாட்டிலிருந்து 36 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, சுருள்வாள் வீச்சு ஆகிய போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்ட 36 பேரும் பதக்கங்களை வென்றனர்.
இந்நிலையில், போட்டி முடிந்த பின் இன்று நாடு திரும்பிய இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாரம்பரிய சிலம்பம் சங்கத்தின் தலைவரும் பயிற்சியாளருமான ரவி கூறுகையில்,
"பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இவர்கள் பதக்கங்களை வென்றது பயிற்சியாளரான எங்களுக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளது. மேலும் இது போன்ற பல்வேறு மாணவர்களை உருவாக்குவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எங்களுக்குப் போதுமான வசதியை தமிழ்நாடு அரசு செய்து, சிலம்பப் போட்டியை உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார்.