தரமற்ற பரிசோதனை கருவிகளுக்கு தடை விதித்து, புனே ஆராய்ச்சி நிலையத்தால் அங்கீகரிக்கப்படும் தரமான பரிசோதனை கருவிகளை மட்டுமே கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்படி, மத்திய சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்ணய அமைப்பு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மருந்துகளின் தரம் மற்றும் செயல்பாடுகள், விற்பனை, இறக்குமதி குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.
மருந்துகளை உட்கொள்வதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை தடை செய்யவும் முழு அதிகாரம் இந்த அமைப்புக்கு உள்ளது. 2018ஆம் ஆண்டுக்கு பிறகு இறக்குமதி மற்றும் உள்நாட்டில் தயாராகும் அனைத்து மருந்துகளும் உரிய ஆய்வக பரிசோதனைக்கு பிறகே இந்தியாவில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
நோய்களின் தன்மையை பொறுத்து மருந்து நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிமம் வழங்குகிறது. குறைந்த மற்றும் மிதமான பாதிப்புள்ள நோய்களுக்கான மருந்து இறக்குமதி மற்றும் மருந்துகளைப் தயாரிக்க மாநில அரசே அனுமதி வழங்கும். தீவிரமான மற்றும் அதிதீவிரமான நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி மற்றும் தயாரிக்க மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்குகிறது.
மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது உரிய பரிசோதனை செய்து தரமான மருந்து என சம்மந்தப்பட்ட நிறுவனம் நிரூபிக்கவேண்டும். அது மீண்டும் புனேவில் உள்ள இந்திய ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே விற்பனைக்கான உரிமம் வழங்கப்படும்.
அதன்படி, கரோனா வைரஸை கண்டுபிடிக்கும் ராபிட் கிட்டை இறக்குமதி செய்ய மார்ச் 26 முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை சீனாவை சேர்ந்த குவாங்கோ வான்ஃபோ பயோடெக் (Guanghow wondfo biotech Co.ltd-China) நிறுவனம் உள்பட பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தவறான முடிவுகளை காட்டுவதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29ஆம் தேதி அனைத்து நிறுவனங்களுக்குமான விற்பனை உரிமத்தினை ஐசிஎம்ஆர் ரத்து செய்து பரிசோதனை கருவிகளை திரும்ப அனுப்ப உத்தரவிட்டது.
மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நாளை மறுநாள் (ஜூன் 18 ஆம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.