சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் 1 லட்சம் கோடி ரூபாய் மதுபான ஊழல் நடந்து இருப்பதாக 250 பக்கம் அடங்கிய மனுவை ஆளுநர் ரவியிடம் வழங்கினார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், சட்ட விரோத பார்களை அறவே ஒழித்திட வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் 300 க்கும் மேற்பட்டோர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி நடத்தினர்.
முன்னதாக, 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த மதுவிலக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளிக்க திட்டமிட்டு இருந்தனர். மேலும், இந்த பேரணியில் பங்கேற்பதற்கு திமுகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு இருந்தது.
அதனை ஏற்று அமமுக சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த 50-கும் மேற்பட்டோர் இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து நேரில் வந்து கலந்து கொண்டனர். மேலும், இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்களும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, "திமுகவினர் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து மதுவிலக்கை வலியுறுத்தி வந்தனர்.
ஆட்சிக்கு வந்த பின் அதனை பரவலாக்குவதை தவிர மது விலக்குக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த போராட்டம் தொடக்கம் தான் முடிவல்ல. அடுத்த போராட்டம் எப்படி இருக்கும் என்று எச்சரிக்கும் வகையில் தான் இந்த போராட்டம்" என தெரிவித்தார்.
இந்த பேரணியை தொடர்ந்து ஆளுநரை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் மதுபான ஊழல் நடந்து இருப்பதாக 250 பக்கம் அடங்கிய மனுவை ஆளுநர் ரவியிடம் வழங்கினார்.