சென்னை: நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.
பின்னர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து, செப்டம்பர்1 ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. பின்னர் தொடக்கப் பள்ளிகள் திறப்பு குறித்து, செப்டம்பர் 28 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்தது. அதன்படி நாளை முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கரோனாவால் சுமார் 600 நாட்களுக்கு பிறகு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து கரோனாவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பள்ளி கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மேலும் மாணவர்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல் போன்றவற்றை வகுப்பறைகளில் ஆசிரியர் கற்பிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை செலுத்த வற்புறுத்தக்கூடாது எனவும் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுகாதாரத்துறைக்கு அடுத்த 2 மாதம் சவாலானது - ராதாகிருஷ்ணன்