சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என அவரது வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட சசிகலா, கடந்த 2017 பிப்ரவரி 15ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவரும் சசிகலா, எப்போது விடுதலையாவார்? என பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து சசிகலாவின் வழக்குரைஞர் ராஜா செந்தூர்பாண்டியனிடம் கேட்ட போது, பணமதிப்பிழப்பு காலத்தில் பினாமி பெயரில் சசிகலா 1,650 கோடி ரூபாய் மதிப்பில் 6 கம்பெனிகளை வாங்கினார் என்பது ஆவணங்கள் அடிப்படையில் உண்மையில்லை.
பினாமி சொத்துக்கள் தொடர்பாக 2019 நவம்பரில் வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு, சசிகலா தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், தனக்கு யாரும் பினாமிகளாக இல்லை எனவும், பணமதிப்பிழப்பு காலத்தில் எந்த சொத்துக்களையும் தனது பெயரில் வாங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு எதிராக சசிகலாவிற்கு சொந்தமாக வீடு எதுவும் இல்லை. 8 ஆண்டுகள் பங்குதாரராக உள்ள ஸ்ரீ ஹரிச்சந்திரா பிரைவேட் லிமிட் நிறுவனம் அந்த வீட்டை கட்டுகிறது, அதற்கும் சசிகலாவுக்கும் தொடர்பு இல்லை. பங்குதாரர்களுக்காக வீடு கட்டி தருவதை எப்படி சசிகலாவின் சொந்த இல்லமாக வருமான வரித்துறை சேர்க்கமுடியும். அதுகுறித்து 90 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என சிறையில் உள்ள சசிகலாவுக்கு வருமான வரித்துறை அனுப்பியதாக கூறப்படும் நோட்டீஸ் இன்னும் கிடைக்கவில்லை என சசிகலா தெரிவிக்கிறார்.
கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை விதிகளின்படி 30 நாட்களில் 3 நாட்களை தண்டனை காலத்தில் இருந்து கழிக்க முடியும் என்பதால், 43 மாதங்களை சிறையில் கழித்த சசிகலா 2021 ஜனவரி 27-க்கு முன்பாக தண்டனை காலம் முடிந்து 129 நாட்களுக்கு முன்பாகவே இம்மாத இறுதியில் சிறையில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளது. நன்னடத்தை அடிப்படையில் சசிகலா வெளியே வருவதற்கு உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரூபா ஐ.பி.எஸ் தடையாக இருந்தால், சட்டரீதியாக சசிகலாவை வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்றது குறித்து ரூபாவின் குற்றச்சாட்டை விசாரணை செய்த வினய்குமார் ஐ.ஏ.எஸ், சிறை வளாகத்தில் உள்ள சிறைத்துறை ஐ.ஜி மற்றும் வழக்கறிஞரை சந்திக்க சசிகலா சென்ற காட்சி அது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து 2017இல் சசிகலா நீக்கப்பட்டதை எதிர்த்து வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில், சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக உறுதி செய்து உயர் நீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.