சென்னை: எம்பி, எம்எல்ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் முன்னேற்றம் குறித்து கண்காணிப்பதற்காக, அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், எம்பி - எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை நிலுவையில் வைத்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சிறப்பு நீதிமன்ற விசாரணையை கண்காணிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்ததை எதிர்த்து, முன்னாள் அரசு வழக்கறிஞர் பாலமுருகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆவணங்கள் தர முடியாது
இந்த வழக்கில் வாதங்களை முன் வைப்பதற்காக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, ரகுபதி, செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகள் குறித்த ஆவணங்களை வழங்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதில் சில வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி வழக்கின் ஆவணங்கள் கோரிய வழக்கை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்குக்கு சம்பந்தமில்லாத மூன்றாவது நபருக்கு ஆவணங்களை வழங்க முடியாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனு
இந்நிலையில், அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மூன்றாவது நபருக்கு வழக்கு ஆவணங்களை வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த காலங்களில் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, எம்பி - எம்எல்ஏக்களுக்கு எதிராக 315 வழக்குகள் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து எடுத்த வழக்கை முடித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் திறமையாக வாதங்களை எடுத்து வைக்க இந்த வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: பொறியியல் முதலாண்டு வகுப்புகள் அக்.25இல் தொடங்கும்- அமைச்சர் பொன்முடி