சென்னையில் உள்ள தனியார் கிறிஸ்துவ கல்லூரியில் மாணவ மாணவிகளை, கடந்த ஜனவரி மாதம் பெங்களூருக்கு சுற்றுலாவுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்பின் அந்த கல்லூரியைச் சேர்ந்த சாமுவேல் டென்னிசன், ரவின் ஆகிய இரு பேராசிரியர்கள் சுற்றுலா சென்றபோது தங்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாணவிகள் பலர் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.
இதனால் பேராசிரியர்கள் இருவரையும் பணியிடைநீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தவறான குற்றச்சாட்டு எனக்கூறி நோட்டீஸ்யை ரத்து செய்ய பேராசிரியர் சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அக்கல்லூரிகள் நன்னெறியை பின்பற்றுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவும் தெரிவித்தார். அவர் இப்படி கூறியது வழக்கிற்கு சம்மதமே இல்லை என எதிர்தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருத்தை திரும்ப பெறுவதாக தெரிவித்தார்.
இதேபோன்று கடந்த 2015ஆம் ஆண்டு கலாச்சார விழா நடத்த அனுமதி கேட்ட வழக்கு ஒன்றில், ஆடை கட்டுப்பாடு முறை அமல்படுத்த வேண்டும் என தாமாக உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் கடந்த ஜூலை 2014ல் மோசடி வழக்கில் ஈடுபடுபவர்களின் கைகளை வெட்ட வேண்டும் என உத்தரவிட்டார். இது அப்போது வழக்குக்கு தொடர்பில்லாத தீர்ப்பு என விவாதமாக்கப்பட்டது.
ஆகவே, நீதிபதி வைத்தியநாதன் ஆதாரங்களின் அடிப்படையில் நீதி வழங்காமல், தொடர்பில்லாத கருத்துக்களையும் உத்தரவுகளையும் தெரிவிப்பதால் சட்டஒழுங்கு சீர்கெடுகிறது. இதனால் தற்போது கிறிஸ்துவ நிறுவனங்களுக்கு மக்கள் மத்தியில் தவறான எண்ணம் நிலவி வருகிறது.
எனவே பாலியல் புகார்கள், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் குறித்த வழக்குகளை நீதிபதி வைத்தியநாதன் பட்டியலிடக் கூடாது என தெரிவிக்கிறோம். இவ்வாறு வழக்கறிஞர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.