சென்னை: ஆவடி திருமலை ராஜபுரத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் பவேஷ் ஜெயின். இவருக்கு செல்போன் விற்பனை செய்வது தொடர்பாக சேக்காடு பகுதியைச் சேர்ந்த ஜெயம் (20) என்ற இளைஞர் பழக்கமாகி வாடிக்கையாக செல்போன் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடனாக ஜெயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாவேஷிடம் சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் வாங்கி சென்றுள்ளார்.
அதன் பிறகு, அதற்கான பணத்தை திரும்ப தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். பின்னர் செல்போன் எண்ணையும் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் பாவேஷ், ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் கடந்த மே மாதம் 28ஆம் தேதி புகார் அளித்தார்.
இதைதொடர்ந்து, ஜெயத்திடம் விசாரணை செய்வதற்காக ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர், ஜெயத்தின் தந்தைக்கு போன் செய்து விசாரணைக்கு ஆஜாராக கூறியுள்ளார். இந்த நிலையில், ஜெயத்துக்கு ஆதரவான வழக்கறிஞர் என கூறி காவலரை செல்போனில் அழைத்து ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ளார்.
மேலும், ‘உன்னையும் உன் குடும்பத்தையும் காலி செய்துவிடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. காவலரை மிரட்டியது உண்மையில் வழக்கறிஞர் தானா? அவர் எந்த ஊரை சேர்ந்தவர், ஜெயத்திற்கும் அவருக்கும் என்ன தொடர்பு என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறனர்.
இதனிடையே புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயம் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த மகனை கொன்ற பெற்றோர்