சென்னை கொரட்டூர் பாடி தேவர் நகரைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி நாகராஜ் (20). இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக இருந்து வருகிறார். நேற்றிரவு (மார்ச் 10) இவருடன் பணியாற்றும் ராயபுரத்தைச் சேர்ந்த பிரதீப் (23) உள்பட 10க்கும் மேற்பட்ட பயிற்சி வழக்கறிஞருடன் மெரினா சர்வீஸ் சாலையிலுள்ள ஃபாஸ்ட் ஃபுட்டில் உணவருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது மணற்பரப்பில் அமர்ந்திருந்த காதல் ஜோடி ஒன்று தவறாக நடந்து கொண்டதை நாகராஜ் கண்டு, அவர்களிடம் சென்று, பொது இடத்தில் இப்படி நடக்கலாமா என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக ஆத்திரத்தில் அங்கிருந்து சென்ற காதல் ஜோடி, சிறிது நேரத்தில் அவரது நண்பர்கள் 6க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து வழக்கறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் திடீரென அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கம்பி, பீர் பாட்டிலால் நாகராஜ், பிரதீப் ஆகியோரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த இரு வழக்கறிஞர்களும் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதல் குறித்து வழக்கறிஞர்கள் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய காதலன் உள்ளிட்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆந்திரா டூ மதுரை: கிலோ கணக்கில் கஞ்சா கடத்தல்...