கரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பிலும், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அரசு சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தல், மருந்து அடித்தல் , துண்டு பிரசுரம் விநியோகம் செய்தல் உள்ளிட்டவை மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் பயோமெட்ரிக் முறை ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளில் மாணவர்களுக்கு சோப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை முதலமைச்சர் தலைமையில் 3 ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து முடிந்து, பல்வேறு அறிக்கைகளை அவர் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளித்தும், பொதுமக்கள் 15 நாள்களுக்கு வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31ஆம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முதலமைச்சர் தலைமையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அலுவலர்கள் கலந்துகொள்ளும் 4ஆவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான மேலும் சில புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி பொதுத்தேர்வுகள், ஆண்டின் இறுதித்தேர்வுகளை ரத்துசெய்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: கரோனா தொற்று: தமிழ்நாட்டில் எண்ணிக்கை 3ஆக உயர்வு!