சென்னை ராயபுரத்தில் உள்ள மண்டலம் ஐந்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ராயபுரம் மண்டலத்தில் இதுவரை 4 ஆயிரத்து 207 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 2 ஆயிரத்து 274 பேர் குணமடைந்துள்ளனர். 54 பேர் உயிரிழந்தனர். கரோனா பாதிப்படைந்த ஆயிரத்து 879 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 469 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் முகக் கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்ததன் மூலம் இரண்டு லட்சம் ரூபாய் வந்துள்ளது. மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்தால்தான் முழு ஊரடங்கு அமல்படுத்த முடியும். தமிழ்நாட்டில் சமூக தொற்று என்பது இல்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் அரசு தெரிவித்து வருகிறது. மாவட்டம் வாரியாகவும் மண்டலம் வாரியாகவும் தகவல் தெரிவித்து வருகிறது. இறப்பு விகிதத்தில் மறைக்க வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 நாள் சீரக குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காசியை காவலில் எடுக்க சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு!