சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர மற்றப் பருவத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதற்காக மாணவர்கள், ஆசிரியர்கள், துணைவேந்தர்கள், பல்கலைக் கழகங்களின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.
கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 4 பருவத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. இதன் மூலம் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுதாமலேயே உயர்கல்வியில் தேர்ச்சி பெறும் நிலை உருவாகி உள்ளது. மேலும் மாணவர்கள் வேலைக்கு செல்வதில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் நேரடியாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். மாணவர்கள் படிப்பதற்கான விடுமுறை அளிக்கப்பட்டு, அதன் பின்னர் நேரடியாகவும் தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
கரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வருவதாலும், மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, இறுதிப் பருவத்தேர்வு தவிர பிற பருவத்திற்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் தேர்வு
1. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் காந்திராஜ் கூறும்போது, "கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நேரத்தில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு என்பது வரவேற்க தக்கது. உயர்கல்வித்துறை அமைச்சர் மாணவர்கள், ஆசிரியர்கள் , துணைவேந்தர்களை அழைத்து பேசி தீவிர ஆலோசனைக்கு பின்னர் இறுதி பருவத்தேர்வு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் 20 தேதிக்குள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
மருத்துவக்குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் சூழ்நிலை காரணமாக இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு ஆன்லைன் தேர்வு வேண்டாம் என்று கூறி இருந்தது. ஆனால் சூழ்நிலை காரணமாக இது நடைபெறுகிறது" எனக் கூறினார்.
இறுதி பருவத் தேர்வு
2. தமிழ்நாடு அனைத்து கல்லூரி ஆசிரியர் சங்கம் பொது செயலாளர் தாமோதரன் கூறும்போது, "இந்த பருவத்திற்கான வகுப்புகள் மாணவர்களுக்கு நடைபெற்று கொண்டிருந்தது. தற்போது மாணவர்களுக்கு படிப்பதற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நேரடி தேர்வுகள் போன்று மாதிரி தேர்வுகளும் நடைபெறும். மாணவர்கள் உயிர் பாதுகாக்கும் விதமாக அனைவரின் கருத்துகளையும் கேட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி தரம் குறைந்து விட கூடாது என்பதற்காக இறுதி பருவத் தேர்வுகள் சுழற்சி முறையில் நேரடியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் அனுப்புவதையும், தேர்வு நடைபெறுவதையும் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிந்தப்பின்னர் மாணவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பும் விடைத்தாளும், நேரடியாக அனுப்பும் தேர்வு விடைத்தாளும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.
ஆன்லைன் தேர்வு
3. ஆன்லைன் தேர்வுக் குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும்போது, "கல்வியை பொருத்த வரையில் கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அதன் மூலம் பெற்ற அனுபவங்கள் குறித்து எந்தவிதமான தகவல்களும் நம்மிடம் இல்லை.
குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் நாம் எந்தவிதமான தகவல்களையும் வைத்திருக்கவில்லை. ஆன்லைன் மூலம் கட்டணம் இல்லாமல் உலகளவில் சிறந்த கல்வி கிடைக்கிறது. உலகளவில் அளிக்கப்படும் தரமான கல்வியை நாம் அளிக்கவில்லை. கரோனா காலத்தில் மருத்துவத்துறையில் மாணவர்களை பயன்படுத்தி வருகிறோம்.
அதேபாேல் பிறத்துறையில் உள்ள மாணவர்களையும் பயன்படுத்தி இருக்கலாம். எதிர்காலத்திற்கான புரிதல், பார்வை நம்மிடம் கிடையாது. உயர்கல்வியில் பிற நாடுகளில் அளிக்கப்படும் வசதிகளை நாம் அளிக்கவில்லை. கொரியா போன்ற நாடுகளில் இண்டர்நெட் இலவசமாக ஏற்படுத்தி தந்துள்ளனர். உலகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப உயர்கல்வித்துறையில் மாற்றங்களை கொண்டு வரவில்லை. ஆன்லைன் தேர்வின் மூலம் மாணவர்களை பாதிக்கப்படுவார்கள் என்ற புரிதலும் இல்லாமல் இருக்கின்றோம்.
உயர்கல்வியில் ஆன்லைன் அல்லது நேரடித் தேர்வினை நடத்துவதற்கு தமிழ்நாட்டில் எந்தவிதமான தரவுகளும் கிடையாது. பொதுவாக ஆன்லைன் மூலம் தேர்வு என்பது சரியாக இருக்காது. இண்டர்நெட் தொடர்பு சரியாக கிடைக்காவிட்டால் அந்த மாணவருக்கு பாதிப்பு ஏற்படும். இவர்களுக்கான எந்தவிதமான திட்டமிடலும் இல்லை. சமுதாயத்தின் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதே தனது வேண்டுகோள்.
உயர்கல்வித்துறையில் தேர்வு முறையில் உண்மையான பலன் இருக்குமா? என்பது தெரியாது. கல்வி வணிகமயமாக்கப்பட்டுள்ள சூழு்நிலையில், தனியார் கல்லூரிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லாமல் இருக்கிறது. இது குறித்து துணைவேந்தர்களும் சரியான தகவல்களை அளிப்பதில்லை. கல்வியில் அரசியல் புகுந்ததால், பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
உலகவிளவில் கல்வியாண்டு முழுமையாக மாற்றம் அடைந்துள்ளது. கரோனா தொற்றின் காரணமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேர்வு முறை வெளிப்படைத்தன்மையுடன் இல்லாவிட்டால் உலகளவில் தேர்விற்கு எந்தளவிற்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள் என்பது தெரியாது. உலக நாடுகள் இந்த தேர்வு மதிப்பெண்களை எளிதாக ஒதுக்கீடவிடவும் வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் சரியாக நிர்ணயம் செய்து, தரமான முறையில் தேர்வுகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் மாணவர்கள் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் படிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
ஆன்லைன் மூலம் பாடம்
4. கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி கூறும்போது, "தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். மேலும் மாணவர்களை நேரடியாக வர வைத்து தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அசாதரண சூழ்நிலையில் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்காத வகையில், விடைத்தாள் பதிவேற்றம் செய்யவும் சலுகை அளித்துள்ளனர்.
மேலும் இந்தப் பருவத்தேர்வு தரமானதாக இருக்குமா? என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கும். இது தற்காலிக தீர்வாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு சிறந்தது கிடையாது. விடைத்தாள் திருத்தும் முறை நேரடியாக நடைபெறுவதற்கும், ஆன்லைனில் நடைபெறுவதற்கும் அதிகளவில் வித்தியாசம் இருக்கிறது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தியதால், ஆன்லைனில் தேர்வு வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அரசாங்கம் நேரடியாக தேர்வு நடத்தப்படும் என அறிவித்தனர். தற்பொழுது உள்ள சூழ்நிலையின் காரணமாக ஆன்லைனில் தேர்வினை அறிவித்துள்ளனர்.
இறுதியாண்டு மாணவர்களுக்கு எவ்வளவு விரைவாக தேர்வினை நேரடியாக நடத்த முடியுமோ அந்தளவிற்கு விரைவாக தேர்வினை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு அடுத்த பருவத்தேர்வும் கால தாமதம் ஆக கூடாது. மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், உயர்கல்வி பயில்வதற்கும் வாய்ப்பாக எந்தளவிற்கு விரைவாக முடியுமோ, அந்தளவிற்கு விரைவாக நடத்த வேண்டும். மேலும் ஆன்லைன் மூலம் நடைப்பெறும் தேர்விலும் சரியான முறையில் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனித உரிமைக்கான போராட்டம்: சர்வதேச விருது பெற்ற எவிடென்ஸ் கதிர் - சிறப்பு நேர்காணல்