சென்னை: கொளத்தூரை சேர்ந்தவர் ஜிதேந்தர்( 34) இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (ஜனவரி 23) கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தலைமைச் செயலக காலனி முதல் தெருவில் தனக்குச் சொந்தமான வீடு ஒன்று காலியாக இருப்பதாகவும், அந்த வீட்டை வாடகை விடுவதற்காக magicbricks.com என்ற இணையதளத்தில் விளம்பரம் செய்து இருந்ததாக தெரிவித்துள்ளார்.
கடந்த 18ஆம் தேதி அணிகேட் விஜய் கல்போர் என்பவர் தனக்கு போன் செய்து, தான் டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும் தற்போது சென்னை விமான நிலையத்தில் பணியிட மாறுதல் வந்துள்ளதாக ஜிதேந்தரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இணையதளத்தில் பதிவிட்டுள்ள வீடு பிடித்து உள்ளதாகவும் 27ஆம் தேதி குடும்பத்துடன் குடி வருவதாகத் தெரிவித்து, அவரது ஆதார் அட்டை பான் கார்டு மற்றும் ஐடி கார்டு ஆகியவற்றை அனுப்பியதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் வீடு சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்த போது, அட்வான்ஸ் தொகையான ஒரு லட்ச ரூபாயை அனுப்புமாறு அணிகெட்டிடம் கேட்டபோது ஆர்மி டிரன்சாக்சன் என்ற முறை இருப்பதாகவும், ஒரு லட்ச ரூபாய் அனுப்ப முடியாது என தெரிவித்தார். மேலும் ஒரு லட்ச ரூபாய் அனுப்பினால் சேர்த்து இரண்டு லட்சம் ரூபாயாக அனுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.
இதனை நம்பி அவரது வங்கி கணக்கிற்கு முதலாவதாக இரண்டு ரூபாயை அனுப்பியதாகவும், அதற்கேற்ப நான்கு ரூபாயாக தனது வங்கிக் கணக்கிற்கு வந்துள்ளது. பின்னர் ஜி பே, பேடிஎம் மூலமாக ஒரு லட்ச ரூபாயை அவரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரமாக இரண்டு லட்ச ரூபாய் தனது வங்கிக் கணக்கிற்கு வராததால் சந்தேகமடைந்து அணிகட்டிற்கு கால் செய்த போது சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. தான் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்து உடனடியாக கொளத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் இழந்த பணத்தை உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த மர்ம ஆசாமியையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி