அதிமுக தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது. இங்கு இன்று காலை திடீரென கூடிய 500க்கும் மேற்பட்ட அக்கட்சியின் தொண்டர்கள், அக்கட்சியின் தி.நகர் சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பதவி விலகக்கோரி திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட அதிமுக வட்டச் செயலாளர்கள் 53 பேரில் 43 பேரை மாற்றி புதிய நபர்களை தி. நகர் எம்எல்ஏ சத்யா நியமித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போது மாற்றப்பட்டுள்ள பெரும்பாலான வட்டச் செயலாளர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுகவில் பணியாற்றி வருவதாகவும், அவர்கள் இருவருக்காகவே தாங்கள் அதிமுகவில் இணைந்து பணியாற்றியதாகவும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், நீக்கப்பட்டுள்ள வட்டச் செயலாளர்களில் இருவர் தீக்குளிக்கவும் முயன்ற நிலையில், அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
அதிமுக சார்பாக போட்டியிட இருக்கும் மாநிலங்களவை வேட்பாளர்கள் இன்று காலை மனுதாக்கல் செய்ய இருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்த முற்றுகை போராட்டம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.