2019ஆம் ஆண்டு மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதில், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா செய்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும், பல்வேறு முறைகேடுகளை செய்தும் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ரவீந்திரநாத் குமார் எம்.பி. மனுத் தாக்கல் செய்தார். அதில், எந்தவித ஆதாரங்களும் இல்லாமல், கற்பனையின் அடிப்படையில் தன்மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும், அதிமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ரவீந்திரநாத்குமார் எம்.பி. தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, வழக்கு தொடர்ந்த மிலானிக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் பார்க்க: கேரள இளைஞர் கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் தண்டனை!