சென்னை: அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை (ஜூன் 23) நடைபெறுகிறது. இதில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் ஓபிஎஸ் நாளை பொதுக்குழுவில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பொதுக்குழு நடைபெறும் திருமண மண்டபத்தை நோக்கி வந்தனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பனியில் இருந்த காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து திருமண மண்டபம் வரை அனுமதித்தனர். அங்கு சென்றவர்கள் இங்கு நடக்கும் பணிகளை பார்க்க செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர். அதற்கு காவல் துறையினர், செல்ல தடுத்ததால் காவல் துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தையையடுத்து அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் ஈபிஎஸ்-க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியவாறு அங்கிருந்து சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நாளை நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வருவார்கள் என்றும் ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்பதையும் பார்க்க வந்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால், தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் கூறினர். மேலும், ஈபிஎஸ்க்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். ஆதரவாளர்கள் வந்து சென்ற பிறகு வரவேற்புக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் சில கிழிக்கப்பட்டதால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு: நீதிமன்றத்தில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்: முழுப்பின்னணி!