சென்னை: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவத்தில் ஓபிஎஸ் தரப்பினர் பொருட்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிபிசிஐடி போலீசார் அந்த பொருட்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அந்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழக்கு தொடுத்த நிலையில், பொருட்களை ஈபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலைதூக்கிய போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக பொது குழு கடந்த ஆண்டு ஜூலை 11ல் வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் புகுந்த ஓபிஎஸ் தரப்பு அலுவலகத்தில் இருந்த சொத்து ஆவணங்கள், வாகனங்களின் பதிவு புத்தகங்கள், கணினி உள்ளிட்டவற்றை சூறையாடி சென்றதாக, ஈபிஎஸ் தரப்பினர் புகார் அளித்தனர். ஈபிஎஸ் தரப்பில் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் ஓபிஎஸ் தரப்பினர் சூறையாடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்ட பொருட்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஓபிஎஸ் தரப்பினர் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, சிபிசிஐடி போலீசார் அந்த பொருட்களை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சூறையாடிச் செல்லப்பட்ட இந்த பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், நீதிமன்றம் வசம் இருக்கும் பொருட்களை அவரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் தரப்பில் வைத்திலிங்கம் மனுதாக்கல் செய்தார்.
இந்த 2 மனுக்களும் நீதிபதி மோகனாம்பாள் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரியாஸ், வைத்திலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஸ்ரீராம், நாகேந்திரன் ஆகியோர் வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொது செயலாளர் தேர்தல் தொடர்பான பிரதான உரிமையியல் வழக்குகளில் இடைக்கால மனுக்கள் மீது தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதான வழக்கில் இறுதி தீர்ப்பு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களுக்கு யார் உரிமையாளர் என்று தற்போது முடிவு செய்ய முடியாது என்று கூறி, இரு தரப்பு மனுக்களும் நிலைக்கத் தக்கதல்ல என்பதால் அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கியதில் இருந்து ஓபிஎஸ் தரப்பிலும், ஈபிஎஸ் தரப்பிலும் மாறி மாறி வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகிறது. இடைக்கால மனு தாக்கலில் வென்ற ஈபிஎஸ் தற்போது பொதுச்செயலாளர் ஆகிவிட்டநிலையில், அவருக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஓபிஎஸ், அவர் தரப்பினர் தொடர்ந்து வழக்கு தொடுத்து கொண்டே இருப்பார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.