பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது பேனர் விழுந்ததில் அவர்மீது லாரி ஏறியதில் அப்பெண் உயிரிழந்தார். அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் என்பவரின் இல்ல விழாவிற்காக சாலையின் மையப்பகுதியில் வைக்கப்பட்ட பேனரே சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமாகும்.
இந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 28ஆம் தேதி நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பின்னர் ஜாமின்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தான் சிகிச்சையில் இருந்ததாகவும், வழக்கிற்காக எங்கேயும் தான் தலைமறைவாகவில்லை. விதிமீறல் பேனர் வழக்கிற்கும், ஜாமின் வழக்கிற்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மனுக்களை விசாரிக்க வேண்டுமென ஜெயகோபால் மற்றும் மேகநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாங்கள் தாக்கல் செய்த ஜாமின் மனுக்களை வாபஸ் பெறகிறோம் அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று ஜெயகோபால், மேகநாதன் தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து இருவரின் ஜாமின் மனுக்களையும் திரும்பப்பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ‘என் மகளின் இறப்பிற்குக் காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்க!’ - சுபஸ்ரீ தந்தை ஆவேசம்