வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யப் பிரமாண்ட எல்இடி திரை வசதி கொண்ட வாகன பரப்புரையை, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி கையில் எடுத்துள்ளது. வாகனப் பரப்புரை பணிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று(மார்ச்.16) தொடங்கப்பட்டது.
இது குறித்து சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் அஸ்பயர் கே. சுவாமிநாதன் கூறுகையில், "அதிமுகவின் தேர்தல் பரப்புரையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்ட எல்இடி திரைகள் மூலம் அதிமுகவின் சாதனைகளை வாக்காளர்களிடம் கொண்டுசெல்லும் பணி தொடங்கியுள்ளது.
இந்த எல்இடி பரப்புரையில் அதிமுக அரசின் மக்கள் சார்ந்த நலத் திட்டப்பணிகள், கரோனா கால மீட்புப் பணிகள், கரோனா கால தொழில் முதலீடுகள் உள்ளிட்டவற்றை விளக்கும் காணொலி தொகுப்புகள் திரையிடப்பட்டன.
அத்துடன் சாமானிய மக்களுக்கு எதிரான திமுகவினரின் அராஜகங்கள் குறித்த காணொலி தொகுப்பும் காண்பிக்கப்பட்டது. இதைத் தமிழ்நாட்டில் பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இந்தப் பிரமாண்ட எல்இடி பரப்புரைக்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது. குறிப்பாகக் கிராமப்புற மக்கள் இந்தப் பரப்புரையை நின்று கவனித்துச் செல்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வா வா ஏரியாக்கு வா... டிடிவி தினகரனை ஆர்.கே. நகருக்கு அழைத்த அதிமுக வேட்பாளர்