தமிழ்நாடு சட்டப்பேரவையில் 22 இடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 212ஆக உள்ளது. இதில் 107 பேரின் ஆதரவு இருந்தால் ஆட்சிக்கு பாதகம் இல்லை என்ற நிலையில், 114 எம்எல்ஏக்களின் ஆதரவோடு அதிமுக ஆட்சியைத் தொடர்கிறது. இதற்கிடையே, 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் வருகின்ற மே 23ஆம் தேதி வெளியாகிறது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மூன்று எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால்...
இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று கூறி அறந்தாங்கி ரத்தின சபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூன்று எம்எல்ஏக்களுக்கு 'உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது' என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஏழு நாட்களுக்குள் அளிக்கப்படும் அவர்களது விளக்கத்தைப் பொறுத்து சபாநாயகரின் நடவடிக்கை இருக்கும்.
ஒரு வேளை அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 111ஆக குறைந்து தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த பலம் 209ஆகி விடுகிறது. இதில் ஆட்சியமைக்க 105 இடங்களை பெற்றிருக்க வேண்டும். இதனாலும் அதிமுக ஆட்சிக்கு பாதிப்பு ஏதும் இல்லை.
அதிமுக கையில் இருக்கும் ஒரே ஆயுதம்... எண்ணம் நிறைவேறுமா?
இந்நிலையில்தான், மே 23ஆம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவருகின்றன. இதில், 22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிவாய்ப்பை இழக்க நேர்ந்தால் பெரும்பான்மை பெறமுடியாமல் ஆட்சிக் கவிழும் சூழல் உள்ளது. இதனைத் தடுக்கவே மேலே குறிப்பிட்ட மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர் ஆளும் தரப்பினர். அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் நீதிமன்றம் செல்வர். இதனால் அதுவரை ஆட்சிக்கு பாதிப்பு ஏதும் இல்லை என ஆளும் அதிமுக கணக்கு போட்டுள்ளது. ஆனால், அவர்கள் நீதிமன்றத்தின் கதவை தட்டாமல் இருந்தால் அது, அதிமுக அரசுக்கு மேலும் பாதகமாகிவிடும். இருப்பினும், அதிமுக கையில் இருக்கும் ஒரே ஆயுதம் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்வதுதான். இதனால் ஏற்படும் காலியிடத்தையே காரணம் காட்டியே ஆட்சியை நீட்டிக்கலாம் என்பது அதிமுகவின் எண்ணமாக இருக்கிறது.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
இதற்கிடையே, சபாநாயகர் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், 22 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் சட்டப்பேரவையின் பெரும்பான்மையினை மாற்றியமைக்கும் விதத்தில் இவ்வாறான முடிவுகளை சட்டப் பேரவைத் தலைவர் எடுப்பது, தமிழ்நாடு சட்டப்பேரவை மாண்பிற்கு கேடாய் விளைந்திடும் என்று கூறியுள்ளார். மேலும், மக்களாட்சியில் ஒரு சட்டபேரவைத் தலைவர், இவ்வாறு நடந்துகொண்டால் அது அவர் நடுநிலைமையோடு செயல்படவில்லை என்று உணர்த்துகிறது என்றும் ஸ்டாலின் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி தொடர ஐந்து தொகுதிகளில் வென்றால் போதும்
மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு சட்டப்பேரவையின் பலம் 231 ஆகும். இதில் ஆட்சி அமைக்க 116 பேரின் ஆதரவு தேவை. ஏற்கனவே, அதிமுகவுக்கு 111 இடங்கள் உள்ளன. வரும் இடைத்தேர்தல் முடிவில் ஆட்சித் தொடர அதிமுக ஐந்து இடங்களில் வென்றால் போதும் என்பது எடப்பாடியின் கணக்கு.
அதேசமயம், திமுக 19 இடங்களில் வென்றால் மட்டுமே காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
எதனடிப்படையில் அதிமுகவின் நகர்வு இருக்கும்?
இந்நிலையில், சபாநாயகர் மீது கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே மே 23ஆம் தேதி இடைத்தேர்தல் முடிவு, மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களின் விளக்கத்தைப் பொறுத்துதான் அதிமுகவின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என தெரிகிறது.