சென்னை: நீட் தேர்வுக்கு எதிராகவும், நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து திமுகவின் இளைஞர் அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், "நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக எங்களுடன் இணைந்து போராட வேண்டும்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ் கூட்டணி அரசு தான். இன்றைக்கு நீட் தேர்வை ரத்து செய்ய உண்ணாவிரதம் என்று நாடகமாடுகிறார்கள். நீட் தேர்வால் உயிரிழக்கும் மாணவர்களுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் பதில் சொல்ல வேண்டும்" என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் வந்தது. அதனால், 21 மாணவர்கள் உயிரிழப்பிற்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம். 2019-ல் காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வு வந்ததாக சொல்லி இருக்கிறார். நீட் தேர்வு குறித்து எடப்பாடி பழனிசாமி குழப்பத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்" என கூறியிருந்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "விடியா திமுக ஆட்சியில், தமிழக சுகாதாரத் துறையை சீரழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்தது போல் செயல்பட்டு வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக மாநாட்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது பற்றி கேள்விப்பட்டதை அறிந்து உளறி வருகிறார்.
சென்னையில், உதயநிதி நடத்திய உண்ணாவிரதம் தோல்வியடைந்ததை மறைக்க எடப்பாடி பழனிசாமி மீது பலி சுமத்தும் வேலையில் இறங்கி இருக்கிறார். நீட் தேர்வு விவகாரத்தால் உயிர் துறந்த 21 பேர் மரணத்திற்கு, எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என "நெருப்பைக் கக்கி" இருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன். நீட்டை ஒழிப்பதற்கு முழுமூச்சாக பாடுபடுபவர் எடப்பாடி பழனிசாமி.
ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது வாரிசு உதயநிதியும், வாய்ப் பந்தல் போட்டு ஏமாற்றியதன் விளைவுதான் இத்தனை அகால மரணங்கள். மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதை வாடிக்கையாகக் கொண்ட திமுகவினர், தங்கள் தவறுகளை மறைப்பதற்கு அடுத்தவர்கள் மீது பழிபோடுவது குறித்து மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால் "பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும்" அமைச்சர் சுப்பிரமணியன் தான்.
அரசு மருத்துவமனைகளில் நிகழும் மரணங்களுக்குக் காரணம் நீங்கள் தான் என்றால் ஏற்பாரா? காவல் நிலைய மரணங்களுக்கும், என்கவுன்டர்களுக்கும் அந்தத் துறையை கையில் வைத்திருக்கும் நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தான் காரணம் என்றால் ஏற்பார்களா? தேர்தல் பரப்புரையின் போது புருடா மன்னன் உதயநிதி அவிழ்த்து விட்ட நிறைவேற்ற முடியாத நீட் ரத்து வாக்குறுதிதான் இத்தனை மரணங்களுக்கும் காரணம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
விளையாட்டு மந்திரியின் வினையான பேச்சுக்களை நம்பிய மக்களை காவு வாங்கி இருக்கிறது. "எங்களால் நீட் தேர்வை ஒழிக்க முடியவில்லை” என்று தமிழக மக்களிடம் பகிரங்கமாகக் கூறி ஸ்டாலினும், உதயநிதியும், அமைச்சர் சுப்பிரமணியமும் மன்னிப்பு கேட்க வேண்டும். வீணாக வாய் நீளம் காட்டினால் "குட்டி குறைத்து, தாய் தலையில் விடிந்த கதையாகியிடும்" என்று எச்சரிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் நாடகம் நடத்துகிறது" - ஜி.கே.வாசன்!