சென்னை : நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வரக்கூடிய நிலையில் அதிமுகவும் தனது பணியை தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை பலப்படுத்துவது மற்றும் களப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவுரைகள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கட்ட ஆலோசனைகளை தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட கழக செயலாளர்களுக்கு வழங்கி வருகிறார்.
இதில் ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டதாக அதிமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் நாளை (நவ. 21) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினுடைய பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர் கூட்டம் ஏற்கெனவே அறிவித்தபடி தலைமைக் கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நாளை (நவ. 21) மாலை 4 மணிக்கு நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜன்நாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்வதா அல்லது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து நாளை (நவ. 21) நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : "திருச்சியில் விரைவில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும்" - அமைச்சர் நேரு தகவல்