சென்னை: சேத்துப்பட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா இன்று (டிசம்பர் 20) கொண்டாடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதியோர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கி, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவில் சாதி, மதம் கிடையாது. கிறிஸ்தவ மக்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும்" என்றார்.
அவரைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "எம்ஜிஆர் காலத்தில்தான் கிறிஸ்தவர்களுக்குப் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. ஜெயலலிதா காலத்தில் ஜெருசலேம் பயணத்திற்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டது" எனப் பேசினார்.
இயேசுபிரானின் கதை
மேலும், தவறு செய்தவர்கள் திருந்தி வரும்போது அவர்களை ஏற்றுக்கொள்வதுதான் சிறந்த தலைமைக்கான அழகு என இயேசுபிரானின் கதையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். இது அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
சசிகலா அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று கூறிவருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் என்றும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுவருகிறார். சசிகலாவை கட்சியில் சேர்க்க மறைமுகமாக கட்சி மூத்த நிர்வாகிகள் சிலர் பேசிவருகிறார்கள்.
ஓபிஎஸ்கூட தேவர் ஜெயந்தி விழாவில் மறைமுகமாக சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து பேசியது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் கட்சிக்குள் சசிகலா வருவதை ஈபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மீண்டும் இயேசுபிரான் கதையைச் சுட்டிக்காட்டி சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் சூசகமாகப் பேசியிருப்பது ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 17 கோடி ரூபாய் முறைகேடு..52 கல்லூரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!