சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அரசு ஊழியர்கள் சங்கத்தினருடன் தலைமை செயலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், அவர்களது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்று, ஊழியர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். திமுக ஆட்சியை விட, அதிமுக ஆட்சியில் தான் அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகைகள் தரப்பட்டுள்ளன. அரசின் நிதி நிலைக்கு ஏற்ப நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி வருகிறது.
அமமுக, நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் இரட்டை இலையையும் அதிமுகவையும் எதிர்த்து போட்டியிட்டு கட்சியை முடக்க நினைத்தது. அதிமுகவை உரிமை கொண்டாட அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அதிமுகவில் உறுப்பினர்களாக இல்லாத சசிகலா, தினகரன் எப்படி அதிமுகவை மீட்போம் என்று கூற முடியும். அவர்களின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துக் கொண்டு உள்ளனர். டி.டி.வி. தினகரனின் கருத்துகளை எந்த தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் சசிகலா வருகையால் எந்த தாக்கமும் ஏற்படாது. அதிமுக - அமமுக இணைய வாய்ப்பு கிடையாது. கட்சிக்கு என கட்டுப்பாடுகள் உள்ளது. அதனை மீறி சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழ், பெருமையை சமூகத்திற்கு எடுத்து சொல்ல வேண்டுமென்ற அடிப்படையில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெறுவதால், அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக மட்டும் தான் நினைவிடம் மூடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2021இல் அதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும். எதிர்க்கட்சியாக இருக்கக்கூட தகுதியில்லாத கட்சியாக திமுக மாறியுள்ளது. அதிமுகவிற்கு பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் தேவையில்லை. சட்டப்பேரவை வலிமையான ஜனநாயாக அமைப்பு. அதில் திமுக பங்கேற்காமல், மக்களின் பிரச்னைகளைப் பேசாமல் இருப்பது, தொகுதி மக்களுக்கு செய்யும் துரோகம்" என்று குற்றம் சாட்டினார்.