சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளைத் தொடங்குவதற்கு உயர் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக, உயர் கல்வித் துறை செயலர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாடு சட்டப்பேரவையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் பொன்முடி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் நலன்கருதி முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வதற்கு செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை நந்தனம், திருப்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, 2021- 22ஆம் கல்வி ஆண்டு முதல் 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு புதிய முனைவர் பட்ட ஆராய்ச்சி பாடப்பிரிவு தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் பாடப் பிரிவிலும், சேலம் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் பாடப் பிரிவிலும், கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) தகவல் தொழில்நுட்பப் பாடப் பிரிவிலும், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் பாடப் பிரிவிலும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரி (தன்னாட்சி) உயிர் வேதியியல் பாடப் பிரிவிலும், திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் ஆங்கில பாடப் பிரிவிலும், கும்பகோணம் அரசு கலை கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் பாடப்பிரிவிலும், கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் பாடப் பிரிவிலும், சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஆங்கிலம் பாடப் பிரிவிலும், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச வணிகம் பாடப் பிரிவிலும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்புகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க கனிமொழி அறிவுறுத்தல