சென்னை: அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு மூலம் 2022-23ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இளநிலை மாணவர் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொதுத் நுழைவுத்தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படவுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் தனித்தனி நுழைவுத் தேர்வு மூலமாகவோ, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலோ மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. CUET தேர்வை வரும் ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பொது நுழைவுத்தேர்வு வாயிலாக இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தேர்வு முகமை நுழைவுத் தேர்வை நடத்துவதன் மூலம் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து தற்போது மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டாலும் இட ஒதுக்கீட்டில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. தற்போது பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீடு நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒத்துழைப்பார்' - மக்களவையில் திருமாவளவன்