சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள
இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 8 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் பதிவு செய்தனர்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு கல்லூரியில் உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவர்களின் வசதிக்காக முதல் முறையாக தகவல் மையம் அமைக்கப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அந்த கல்லூரிகள் குறித்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வதற்காக தகவல் மையத்தின் தொடர்பு எண்கள் எழுதி வைக்கப்பட்டன. ஒரு விண்ணப்பத்தில் மாணவர்கள் 5 கல்லூரியில் உள்ள எத்தனைப் பாடப்பிரிவிற்கும் விண்ணப்பபிக்க முடியும்.
அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு 22 ஆம் தேதி இரவு 12 மணி வரை விண்ணப்பம் செய்தனர். அதன்படி 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் பதிவு கட்டணம் செலுத்தினர். ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 274 மாணவர்களும், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகளும், 78 திருநங்கைகளும் விண்ணப்பம் செய்திருந்தனர். மேலும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் 54 ஆயிரத்து 638 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்து கல்லூரிகளுக்கு 25ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22ஆம் தேதி முதல் தொடங்கும் என உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை மாநிலக் கல்லூரியில் சிறப்பு பிரிவில் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது குறித்து மாநிலக்கல்லூரியின் முதல்வர் ராமன் கூறும்போது, “கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்தவர்களில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
ஜூன் 1ஆம் தேதி பி.காம் படிப்பிற்கும், ஜூன் 2ஆம் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், ஜூன் 3 ஆம் தேதி கணக்கு, புள்ளியியல், இயற்பியல், வேதியியல், சைக்காலாஜி பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 5 ஆம் தேதி ஆசியாவிலேயே காது கேளாதவர்களுக்காக நடத்தப்படும் பி.காம், பிசிஏ (கம்ப்யூட்டர்) பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடத்தப்படும். ஜூன் 7-ம் தேதி தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 8-ஆம் தேதி அரசியல் அறிவியல், இந்தி, உருது, மலையாளம் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 10 ஆம் தேதி ஜியோலாஜி, ஜியோகிராபி பாடத்திற்கும் முதல் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படும்.
மாநிலக் கல்லூரியில் உள்ள ஆயிரத்து 140 இடங்களில் சேர்வதற்கு கடந்தாண்டு 95 ஆயிரத்து 143 விண்ணப்பம் வந்த நிலையில், நடப்பாண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 304 விண்ணப்பங்கள் வந்துள்ளன. வேதியியல் பாடப்பிரிவில் 100 இடங்களில் சேர்வதற்கு கடந்தாண்டு 9ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்தன. ஆனால், நடப்பாண்டில் 13 ஆயிரத்து 593 விண்ணப்பம் வந்துள்ளன. ஒரு இடத்திற்கு 136 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
வணிகவியல் பாடத்தில் 40 இடத்திற்கு 11ஆயிரத்து 145 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு இடத்திற்கு 279 பேரும், தமிழ் பாடத்திற்கு 9ஆயிரத்து 124 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு 7ஆயிரத்து 67 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆங்கிலம் பாடப்பிரிவில் 40 இடங்களுக்கு 6ஆயிரத்து 552 பேர் ஒரு இடத்திற்கு 164 பேர் விண்ணப்பம் செய்திருக்கின்றனர். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும்.
பி.காம் படித்தால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் சிஏ போன்ற உயர்கல்வியில் படிக்கலாம் என்பதால் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்கின்றனர். மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘நானும் முன்னாள் மாணவர் தான் எனவும் இளையவர்கள் அதிகளவில் மாநிலக் கல்லூரியில் சேர வேண்டும்’ என்றார். அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் மாநிலக் கல்லூரி 3ஆம் இடத்தினை பிடித்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 1000 பேரில் 800 பேர் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு செல்கின்றனர். நடப்பாண்டில் வேதியியல் பாடப்பிரிவிற்கு மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பம் செய்துள்ளனர்” என முதல்வர் ராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் கலந்தாய்வு; இதுவரைமாநிலக் கல்லூரியில் மட்டும் 40 ஆயிரத்து 30 விண்ணப்பங்கள் பதிவு