சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வியாண்டிற்கு இன்று (ஆக 20) முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழக முனைவர் ரத்தினகுமார் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தொலைநிலைக்கல்வி குழுமத்தின் அனுமதியோடு தமிழ்நாட்டில் தொலைநிலை கல்வியை 2021-22ஆம் கல்வியாண்டில் வழங்க அனுமதிக்கப்பட்ட ஒரு சில பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் ஒன்று.
வழங்கப்படும் படிப்புகள்
இப்பல்கலைக்கழகம் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை இன்று (ஆக 20) முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வியாண்டிற்கு இன்று (ஆக 20) முதல் மாணவர் சேர்க்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்தக் கல்வியாண்டில் மொத்தம் 58 படிப்புகளை தொலைதூர கல்வி மூலம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதில் 29 இளங்கலை படிப்புகள், 19 முதுகலை படிப்புகள், 10 பட்டயப் படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில், மற்றப் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இணையான கல்வியை வழங்கும் வகையில் அதிகப்படியான படிப்புகளை பருவ முறையில் வழங்குகிறது.
சமூக, தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற முறையில் வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில், தற்கால சூழலுக்கு உகந்த வகையில் பாடதிட்டங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உயர்தரமான செழுமையாக்கப்பட்ட தானே கற்றல் நூல்கள் புதிய வடிவில் பிளேகரிசம் (plagiarism) இல்லாத முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பம்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 132 கற்போர் உதவி மையங்களை அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் அமைத்துள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர முடியாத மாணவர்கள் உதவி மையங்கள் மூலம் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து பயிலலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் படிப்புகளில் சேர www.tnouadmissions.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், தர்மபுரி, விழுப்புரம், மதுரை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மண்டல மையங்கள் மூலமாகவும், 132 உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்கும் பட்டங்கள், பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளுக்கு செல்லும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.